சுதீப்புக்கு மிரட்டல் விடுத்த நண்பர் கைது

விரைவில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் கிச்சா சுதீப், பா.ஜ.,வை சேர்ந்த தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக இந்த தேர்தலில் பிரசாரம் செய்வேன் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அதுமட்டுமல்ல இப்படி பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நினைத்தால் உங்களது பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

அந்த சமயத்தில் அந்த கடிதம் குறித்து சுதீப் கூறும்போது, இது யாரோ அரசியல்வாதி செய்த வேலை அல்ல.. சினிமா துறையில் உள்ள ஒரு நபர் தான் இதை செய்திருக்கிறார். நேரம் வரும்போது அவரைப் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இருந்தாலும் தயாரிப்பாளர் ஜாக் மஞ்சு என்பவர் சுதீப்பின் சார்பாக இந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகள் இந்த கடிதத்தின் பின்னணியில் கன்னட இயக்குனரும் சுதீப்பின் நண்பருமான ரமேஷ் கிட்டி என்பவர் இருப்பதை கண்டறிந்து தற்போது அவரை கைது செய்துள்ளனர். நீண்ட நாள் நண்பர் மட்டுமல்ல சுதீப்புடன் இணைந்து அவரது அறக்கட்டளையையும் நிர்வகித்து வருபவர். இந்த டிரஸ்ட் நிர்வாக கணக்குகளை நிர்வகிப்பது குறித்து, சுதீப் பற்றி ஏற்பட்ட தவறான புரிதலால் இதுபோன்று ஒரு மிரட்டலை அவர் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுதீப்பின் நண்பரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது கன்னட திரையரகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.