கேரளா சொகுசு படகு கவிழ்ந்து விபத்து.. 21 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்! பலி உயரும் என அச்சம்!

மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பறப்பனங்காடி பகுதியில் தூவல் தீரம் என்ற இடத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 21 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 30 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். மே 7ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் படகு கவிழந்து உள்ளது. முன்னதாக, கேரள மாநில அமைச்சர் அப்துர் ரஹ்மான், படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது. . சுமார் 8 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தப் படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. 25 பேர் பயணிக்கத்தக்க படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களை காப்பாற்ற முடியவில்லை என படகில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். மீட்புப் படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.