புதுடெல்லி: ரயில் பயணிகள், தங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்துச் செல்வதற்கான நடைமுறையை எளிதாக்க ஐஆர்சிடிசி இணையதளத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
ரயிலில் செல்லப் பிராணிகளை கொண்டு செல்வதற்கு, சில நிபந்தனைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும். 2 அல்லது 4 படுக்கை வசதிகள் கொண்ட முதல் வகுப்பு ஏசி பெட்டியில் மட்டுமே செல்லப் பிராணிகள் அனுமதிக்கப்படும். மற்ற பயணிகள் புகார் தெரிவித்தால், செல்லப் பிராணிகள், ரயில்வே சரக்கு பெட்டிக்கு அனுப்பப்படும். ரயிலின் முதல் சார்ட் தயாரான பின்புதான், பயணிகள் செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். செல்லப் பிராணிகளை கொண்டு செல்லும் பயணிகளின் டிக்கெட்டும் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் மூலமாக செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
செல்லப் பிராணிகளை ரயிலில் கொண்டு செல்லும் வசதி தொடங்கியவுடன், ரயில்வே டிடிஇ-யும், செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ, ரயில் ரத்து செயய்பட்டாலோ, 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமானாலோ, பணம் திரும்ப கிடைக்காது. ஆனால், பயணிக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.