கோவை மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரதோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகரன் (வயது 30) தந்தையுடன் சேர்ந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இதனிடையே ஓய்வு நேரத்தில் தினகரன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். இதில் உடலை கட்டு கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆசையில் அசைவ உணவு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் புரோட்டின் பவுடர்களை அதிகமாக வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட தினகரன் ஜிம்முக்கு செல்லாமல் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி அதிகமாகி வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணைகள் அதிக அளவு புரோட்டின் பவுடர் சாப்பிட்டதாலும், சிறுநீரகம் செயலிழந்ததாலும் வயிற்று வலி ஏற்பட்டு தினகரன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.