இஸ்லாமாபாத்-பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானில், சீனாவின் கனவு திட்டமான, பெருவழி பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, ௨௦௨௧ல் அமெரிக்க படைகள் விலகின.
இதைத் தொடர்ந்து, தலிபான் பயங்கரவாத அமைப்பு, ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. தலிபான் அரசை, ஐ.நா., உட்பட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் மட்டுமே, தலிபான் அரசுடன் இணைந்து செயல்படுகின்றன.
இருப்பினும், இந்நாடுகளும் தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே ஆப்கன் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் நிதிகளும் முடக்கப்பட்டுள்ளன.
தன் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கான சொத்துகளில் பாதியை பயன்படுத்த அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஆனால், பெண்களுக்கு தலிபான் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால், அந்த முடிவை திரும்பப் பெற்றது.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் குன் காங்க், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஆகியோர் இஸ்லாமாபாதில் நேற்று சந்தித்து பேசினர்.
இதில், தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள அமிர் கான் மட்டாகியும் பங்கேற்றார்.
அப்போது, சீனா – பாகிஸ்தான் இடையேயான, பெருவழி பாதை திட்டத்தை, ஆப்கனுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதற்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் சீனா அதிகளவில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக தலிபான் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்