இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஒய்வு..!

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால், 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான ஆண் வாக்காளர்கள் 2.62 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 2.59 கோடி பேர் என மொத்தம் 5 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகர்ப்புற வாக்குச்சாவடிகள் 20,886. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 12.15 லட்சம் என்றளவில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 9.17 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் முதன் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

நேற்று முன்தினத்துடன் வீட்டில் இருந்து வாக்களிப்பது நிறைவு பெற்றதால், இதுவரை 94.77 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் வாக்களிக்காமல் உள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பா.ஜ.க, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால், பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பிரியங்கா, மல்லிகார்ஜூன கார்கே, ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.