கேரளாவில் டபுள் டெக்கர் படகு விபத்து: தண்ணீரில் மூழ்கிய மக்கள்… பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பரப்பனன்குடியில் பொதுமக்களை கவரும் வகையில் சுற்றுலா படகுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இங்கு பாயும் பூரபுழா நதியானது அரபிக் கடலில் சென்று கலக்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் ஆர்வத்துடன் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சுற்றுலா படகுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

டபுள் டெக்கர் படகு விபத்து

நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு அடுக்குகள் கொண்ட டபுள் டெக்கர் படகு ஒன்றில் அதிகப்படியான பயணிகள் ஏற்றி சென்றதாக சொல்லப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் படகு தண்ணீரில் தள்ளாடியது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். திடீரென அப்படியே கவிழ்ந்து படகு பெரும் விபத்தை சந்தித்தது. இதில் சுமார் 40 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் அதிர்ச்சி

சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர். இந்நிலையில் 20க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். முதல்கட்டமாக 3 பெண்கள், 4 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடனடியாக தண்ணீரில் மூழ்கிய பயணிகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்று காலை நிலவரப்படி 21 பேர் வரை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. பலர் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இரவு நேரத்தில் விதிமீறல்

விபத்து நடந்த இடம் சரியாக ஒட்டும்பரம் அருகே தூவல் தீரம் பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரிகள், மாலை 5 மணி உடன் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேரக் கட்டுப்பாட்டை மீறி 7 மணி வரை படகு பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் போதிய வெளிச்சம் இல்லை. இந்த சமயத்தில் விபத்து நடந்துள்ளது. எனவே மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இரங்கல்

எத்தனை பேர் படகில் பயணித்தார்கள் என்று சரியாக தெரியவில்லை. கூடுதல் கட்டணம் கிடைக்கும் எனக் கருதி 30 முதல் 40 பேர் வரை ஏற்றிச் சென்றதாக கூறுகின்றனர். மீட்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பின்னரே, உண்மை நிலவரம் பற்றி தெரியவரும் என்கின்றனர். மலப்புரம் டபுள் டெக்கர் விபத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேரில் செல்லும் கேரள முதல்வர்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், படகு விபத்தில் பலர் உயிரிழந்ததை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடுவார் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.