Doctor Vikatan: என் வயது 28. காலையில் எழுந்ததும் சுமாராக 50 முதல் 60 தும்மல் போடுகிறேன். அரைமணி நேரம் இது நீடிக்கிறது. வெயில் காலத்திலும் அப்படித்தான். மற்றவர்களை தர்மசங்கடப்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதிலிருந்து மீள தீர்வுகள் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்
தூசி அல்லது நெடியின் காரணமாக யாருக்கும் தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும். ஆனால் அதுவே நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல 50, 60 என அடுக்கடுக்காக தும்மல் போட்டால், அது அலர்ஜியின் காரணமாக வந்ததாக இருக்கலாம்.
தொடர் தும்மலுக்கு ‘அலர்ஜிக் ரைனிட்டிஸ்’ (Allergic rhinitis) எனப்படும் பிரச்னையே காரணம். அதாவது ஒவ்வாமையின் விளைவால் மூக்கின் உள்ளே உள்ள சவ்வில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறிக்கும் பிரச்னை இது. பலருக்கும் இந்த ஒவ்வாமையானது மூக்கின் உள்சவ்வு அழற்சியோடு மட்டும் நிற்காமல், சைனஸ் என்கிற பாதிப்பையும் ஏற்படுத்தும். மூக்கைச் சுற்றியுள்ள காற்றறைகளில் ஏற்படும் ஒவ்வாமையாலும் தும்மல் வரலாம்.
மூக்கைப் பரிசோதனை செய்யும்போது உள்ளே சவ்வு வீங்கியிருப்பது தெரியும். மூக்கின் உள்ளே உள்ள குறுத்தெலும்புகள் (Turbinates) வீங்கியிருக்கும். இது அலர்ஜி இருப்பதற்கான அறிகுறி.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, மூக்கின் உள்ளே பயன்படுத்தும் நேசல் ஸ்பிரே எடுக்கலாம். மூக்கின் உள்ளே செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள, அலர்ஜிக்கான மருந்துகள் அல்லது இரண்டும் கலந்த கலவை மருந்துகள் உதவியாக இருக்கும். நாள்பட்ட அலர்ஜிக்கான மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சைக்கான மருத்துவரை சந்தித்தால் அவரது பரிந்துரையின் பேரில் சைனஸ் பாதிப்பை உறுதி செய்யும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.