ஒரு மனிதனிடம் நாடு, இனம், மொழி, மதம், ஜாதி, நிறம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிர்களை காக்க உருவாக்கப்பட்ட இயக்கமே செஞ்சிலுவை சங்கம். ஒரு நாடு இன்னொரு நாடுடன் போர் செய்யும் போது அதில் ஏற்படும் இழப்புகளை மீட்க வேண்டும். முதலில் உயிர்களை மீட்டால் தான் அவர்களுக்கு தேவையான உடமைகளை தர முடியும். அந்த சேவை மனப்பான்மையை அடிப்டையாக கொண்ட அமைப்பு இது.
தோன்றியது எப்படி:
1828 மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட். கல்வியிலும் சிறந்து விளங்கியவர். முதலில் ஜெனிவா வங்கியில் வேலை செய்தார். அந்த வேலை அவருக்கு மன நிறைவை தரவில்லை. பின்னர் விவசாயம் செய்யலாம் என்று முடிவு எடுத்து அதற்கான பணிகளை மேற் கொண்டார்.நிலங்களை முழு வீச்சில் தயார் செய்யும் பணியில் இறங்கினார். அந்த நிலத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. அதற்கான தண்ணீர் வாங்க வேண்டும் என்றால் பிரெஞ்சு அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதியை பெற பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை பார்க்க பலமுறை முயற்சி செய்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஹென்றி டுனாண்ட் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து நெப்போலியனை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இருவரும் சந்தித்த இடம் போர்க்களம். அங்கு பல உயிர்கள் மரணத்தில், பல உயிர்கள் மரண விளிம்பில், மற்ற உயிர்கள் கை-கால்களை இழந்து துடித்துக்கொண்டு இருந்தது. இதை பார்த்த ஹென்றி டுனாண்ட் கண்களில் கண்ணீர் வடிந்தது. தண்ணீருக்கு சென்ற மனம் கண்ணீருக்கு பஞ்சம் இல்லாமல் நிலத்தில் ரத்த வெள்ளத்தில் கலந்தது. அந்த அவலங்களை கண்டு தனது விவசாய கனவை புதைத்தார். அவரது மனதில் மனித நேய விதை முளைக்க ஆரம்பித்து விட்டது.
இனி வரும் காலங்களில் உலகில் எந்த நாடுகளிலும் போர், பஞ்சம், வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்பட்டால் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து ஒரு சமூக அமைப்பை உருவாக்க அனைத்து நாடுகளிடம் ஆதரவு மற்றும் நிதியை திரட்டினார். அவரின் விடா முயற்சியால் 1864 ம் ஆண்டு ஆகஸ்ட் -22 ம் நாள் 12 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவா நகரில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு உலக செஞ்சிலுவை சங்கம் உதயமானது.
பணிகள் என்ன:
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது பெரும் முயற்சியால் போர் நடைபெறும் இடங்களிலும் மற்றும் புயல்,வெள்ளம், தீவிபத்து, நிலநடுக்கம் ஏற்படும் இடத்திற்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்கின்றன.இது சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நடுநிலையான மனிதநேய அமைப்பாகும். உலகில் மக்கள் பாதிப்பு அடையும் போது சர்வதேச உரிமைச்சட்டத்தின்படி நடைமுறைப்படுத்தும் மனித நேய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
அதே போல நாடுகள் இடையே போர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மனித உரிமைகளை கண்காணிக்கிறது. அவ்வாறு உரிமை மீறல் நடந்தால், உடனே இந்த அமைப்பு சர்வதேச மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு பதிவு செய்யும்.இக்கட்டான காலக்கட்டத்தில் நாடுகள் கடந்து, ஒரு மனிதனின் உயிரை காக்கும் கடவுள் போல செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் உள்ளன. முதலில் 15 நாடுகள் மட்டுமே இந்த அமைப்புகளில் இடம்பெற்று இருந்தன. தற்போது 192 நாடுகள் செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக உள்ளன. அந்த நாடுகளில் சுகாதார சேவை, மருத்துவ சேவை, முதலுதவி சேவை, நிவாரணம் என பல்வேறு மனிதாபிமான சேவைகளை அந்தந்த நாட்டின் அரசுடன் சேர்ந்து செய்கிறது.
மறுவாழ்வு:
போர்கள் நடந்து முடிந்த பிறகு அந்த இடத்திற்கு சென்று, பழைய நிலையை உருவாக்க பல நாடுகளின் உதவிகளுடன் சேவைகளை செய்கின்றன. இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வை உருவாக்க, வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செஞ்சிலுவை அமைப்பில் உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு மருத்துவ பயிற்சி, முதலுதவி பயிற்சி மற்றும் மனிதநேய பண்புகளை வளர்க்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
நடமாடும் மருத்துவ சேவை, ரத்ததானம், நோய் விழிப்புணர்வு, சாலைகள் புனரமைப்பு, நிவாரண உதவி வழங்கல் போன்றவை இந்த அமைப்பின் முதன்மை பணி.அது மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை மக்களுடன் இணைந்து செய்து வருகிறது. 2013–2015 மீள் கட்டமைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டமாக இணைத்து, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளங்கள் மூலமாக சமூக பணிகளை துடிப்புடன் செய்து வருகிறது.
சுனாமி களத்தில்:
உலகை திருப்பி போட்ட சுனாமி, 2004 ம் ஆண்டு தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை, மாலத்தீவு என 14 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2லட்சத்து 30 ஆயிரம் உயிர்களை குடித்து சென்றது. பல லட்சம் பேர் கை-கால்களையும், உடமைகளை இழந்து தவித்த போது அவர்களுக்கு துணையாக ஐ.நா., சபையுடன் இணைந்து சேவை செய்தது.
அந்த மக்களை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி கொண்டு வந்த பெருமை செஞ்சிலுவை சங்கத்தை சாரும்.செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளையும்,பணிகளையும் பாராட்டி மற்றும் உலக நாடுகள் போர்கள் செய்யாமல் அமைதியான முறையால் மனித உயிர்களை காக்க எடுத்த முயற்சிக்காக 1901ல் அமைதிக்கான நோபல் பரிசு செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இன்று செஞ்சிலுவை சங்கத்தின் சேவை இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு உலகம் முழுவதும் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி இதனை உருவாக்கிய ஜீன் ஹென்றி டுனாண்ட் பிறந்த நாளான மே8 ம் தேதி உலகம் முழுவதும் செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடப்படுகிறது.மனிதநேயத்தை காக்கின்ற இந்த அமைப்பின் பணி உலகின் ஆலமரமாக வேர் பிடித்து மக்களுக்கு நிழல் போல என்றும் இருக்கட்டும்!
-எஸ்.கே.சௌந்தரராஜன், எழுத்தாளர் ,திண்டுக்கல்.99946 88836
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்