புதுடெல்லி: ஆம் ஆத்மி ஆளும் டெல்லியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வீட்டை அரசு செலவில் புதுப்பித்திருந்தார். இதற்காக செய்யப்பட்ட செலவு ரூ.45 கோடி எனப் புகார்கள் கிளம்பின. முதல்முறை தேர்தல் வெற்றிக்கு பிறகு கேஜ்ரிவால், அரசு குடியிருப்பு மற்றும் வாகனத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தார். தனது சொந்த காரிலேயே முதல்வர் அலுவலகம் சென்றார். இந்நிலையில் கேஜ்ரிவால் செய்த செலவால் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சியினர், கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அதன் மேற்கூரை 3 முறை இடிந்து விழுந்தது என்று கூறினர்.
முதல்வர் கேஜ்ரிவால், பொதுப்பணித் துறையால் ரூ.30 கோடி செலவிடப்பட்டதாக ஒப்புக் கொண்டார். அதேநேரத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் கூறும்போது, “டெல்லி ஆளுநரின் அரசு குடியிருப்பு ரூ.15 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மத்தியபிரதேச முதல்வர்களுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. டெல்லியில் கட்டப்படும் சென்ட்ரல் விஸ்டாவில் பிரதமருக்காக ரூ.500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவரது அரசு குடியிருப்புக்கு ரூ.90 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் பயணிக்கும் வாகனத்தின் விலை ரூ.12 கோடி” என புகார்களை அடுக்கியிருந்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் கேஜ்ரிவால் வீட்டு முன்பாக பாஜகவினர் கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கேஜ்ரிவால் அரசு வீட்டினுள் எடுக்கப்பட்ட சொகுசு அறைகளின் படங்களை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “தன்னை சாதாரண மனிதன் எனக் கூறிக்கொள்பவர், தனது சொகுசுக்காக ஏழைகள் பணத்தை செலவிட்டுள்ளார். இந்த ராஜ மாளிகைக்காக முறையான டெண்டர் விடாமல் ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தாலும் சரி, உங்கள் வீட்டின் கதவுகளை பொதுமக்களுக்காக திறந்துவிடுங்கள் முதல்வரே! ராஜ வாழ்க்கையை அவர்களும் பார்க்கட்டும்!” என்றனர்.
இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் பாஜகவின் ராம்வீர் சிங் பிதூரி கூறுகையில், “அரசு வீட்டை அலங்கரிக்க அரசு ஒதுக்கிய தொகை ரூ.15 லட்சம் மட்டுமே. எனவே, இவரை சிறைக்கு அனுப்பும் வரை பாஜகவினர் ஓயமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முதல்வர் கேஜ்ரிவால், ‘‘அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜகவினர் இந்தப் பிரச்சினையை எழுப்புகின்றனர்’’ என்று கூறியுள்ளார்.