சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 8) காலை வெளியிட்டார். இதில் பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கரின் எண்ணிக்கை பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது. 32,501 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக சென்டம் விவரம்:
அதன்படி, தமிழ்-2, ஆங்கிலம்-15, இயற்பியல்-812, வேதியியல்-3909, உயிரியல்-1494, கணிதம்-690, தாவரவியல்-340, விலங்கியல்-154, கணினி அறிவியல்-4618, வணிகவியல்-5678, கணக்குப் பதிவியல்-6573, பொருளியல்-1760, கணினிப் பயன்பாடுகள்-4051, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.
அதிகபட்சமாக கணக்குப் பதிவியல் பாடத்தில் 6573 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.
விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.