சென்னை: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லவ் ஜிகாத் என்ற பிரசாரத்தன்மையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை குஷ்பூவும் பார்த்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படம் குறித்து அவர் தெரிவித்துள்ள விமர்சனம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
தி கேரளா ஸ்டோரி – குஷ்பூ விமர்சனம்: சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வெறுப்பு பிரசாரத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை தடை செய்யுமாறு பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. முக்கியமாக முஸ்லிம்கள் குறித்து ஆதாரமற்ற தகவல்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டின.
கேரளாவில் லவ் ஜிகாத் என்ற போர்வையில் 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என இயக்குநர் சுதிப்தோ சென் இந்தப் படத்தில் சித்தரித்துள்ளார். மேலும், முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் ISIS இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் அவர்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகை குஷ்பூ பாராட்டி டிவிட் செய்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ள குஷ்பூ, “அச்சம் காரணமாக தான் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என போராடுகிறார்கள். அப்பட்டமாக சொல்லப்பட்ட உண்மையை அல்லது அதன் ஒரு பகுதியாக இருப்பதை உணர்ந்து அவர்கள் பயப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்கள் என்ன பார்க்க வேண்டும் என அவர்கள் தீர்மானிக்கட்டும், மற்றவர்களுக்காக நீங்கள் அதனை முடிவு செய்ய வேண்டாம். இந்தப் படத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு பொய்யான காரணங்களை சொல்கிறது. ஆனால், இது மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என புரிய வைத்ததற்கு நன்றி” என நடிகை குஷ்பூ பதிவிட்டுள்ளார். குஷ்பூவின் இந்த டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தி கேரளா ஸ்டோரி மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தி கேரளா ஸ்டோரி படத்தை பாராட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், நேற்று முதல் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படவில்லை.