விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வு கசந்து விடுகையில் விடுதலைக்கு எத்தனிக்கும் மனதுக்கு வேறென்ன வேண்டும்? அந்த மூன்று எழுத்து ஆறுதல்… `பிரிவு’ தானே. ஆனால் அதை விரும்பும் வேளையில் பெறுவதற்குக் காத்திருப்பு காலம் அவசியமா?
இந்து திருமண சட்டம் 13பி சட்டப்பிரிவின் படி, விவாகரத்து பெற விரும்புபவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து பெற ஆறு மாத காலங்கள் வரை காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் “சட்டப்பிரிவு 142-ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்துடன் கோரப்படும் விவாகரத்து வழக்குகளில், நீதிமன்றங்கள் தங்கள் முன்னுள்ள வழக்குகளின் தன்மையைப் பொறுத்து, கட்டாய ஆறு மாத காலம் காத்திருப்பு என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கலாம்’’ என்று அறிவித்துள்ளது.
இது குறித்து விகடன் வலைதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறும் தம்பதிகளுக்கு ஆறு மாத கால கட்டாய காத்திருப்பு அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* நடைமுறைக்கு ஏற்றது
* காத்திருப்பு காலம் அவசியம்
* வழக்கைப் பொறுத்து முடிவெடுக்கலாம்’
எனக் கேட்டிருந்தோம்.
கருத்துக் கணிப்பின் முடிவில், `நடைமுறைக்கு ஏற்றது’ என 50 சதவிகிதத்தினரும், `காத்திருப்பு காலம் அவசியம்’ என 30 சதவிகிதத்தினரும், `வழக்கைப் பொறுத்து முடிவெடுக்கலாம்’ என 20 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளனர்.
பெரும்பாலான மக்களின் கருத்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெரும் தம்பதிகளுக்கு ஆறு மாத கால கட்டாய காத்திருப்பு அவசியமில்லை, இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு ஏற்றது என்றே இருந்தது.