புதுடெல்லி: “அரசியல் சாசனத்தில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிவகை இல்லை. அதனாலேயே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை கர்நாடகா பாஜக ரத்து செய்துள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது பாஜகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் (மே 10) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அமித் ஷா இன்று அளித்த பேட்டி ஒன்றில் மாநில அரசின் முடிவு சரியானதே என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “அரசியல் சாசனத்தில் அனுமதிக்கப்படாத இட ஒதுக்கீட்டை தான் கர்நாடகா பாஜக ரத்து செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஓய்வதற்குள் சித்தராமையா, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீட்டை 4-ல் இருந்து 6 சதவீதமாக உயர்த்தினால் அவர்கள் யாருடைய சலுகையில் கைவைக்க வேண்டியிருக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக நேற்று ஹுனகுண்டாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த அமித் ஷா, ”பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ததன் மூலம் பாஜக தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதற்கு எதிராக இருக்கிறது. பாஜக ஒருபோது முஸ்லிம் உள் ஒதுக்கீட்டை அனுமதிக்காது. லிங்காயத்துகளுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை குறைக்கவும் செய்யாது.
பாஜக நிச்சயமாக கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். நான் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டேன். இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என்பதிலேயே கர்நாடக மாநில மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்” என்றார்.
ஒரே கட்டமாக தேர்தல்: கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் 10 அம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நடாக சட்டப்பேரவைத் தேர்தலில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை அமைக்கலாம். பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.