நீட் மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதித்தது மனித உரிமை மீறல்: விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: நீட் மையத்தில் மாணவியின் உள்ளாடையைக் கழற்றி சோதனை நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கலாச்சாரமும், பண்பாடும் போற்றி பாதுகாக்கப்படும் தமிழகத்தில் இத்தகைய இழிவான செயல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது மாணவியின் உள்ளாடையிலிருந்து ஒலி வந்ததால் உள்ளாடையை சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். மீண்டும் நடத்தப்பட்ட சோதனையிலும் ஒலி வந்ததால், உள்ளாடையை கழற்றி வைத்து விட்டு செல்லும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். வேறு வழியின்றி மாணவியும் அவ்வாறே செய்துள்ளார். ஆடையில் உலோகத்தால் ஆன சிறிய கொக்கி இருந்தால் கூட உலோகத்தை கண்டறியும் கருவி (மெட்டல் டிடெக்டர்) ஒலி எழுப்புவது வழக்கம். அதற்காக மாணவியின் உள்ளாடையை அகற்றியது மிகப் பெரிய வன்முறையும், மனித உரிமை மீறலும் ஆகும்.

சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் அந்த மாணவியை கடுமையாக பாதித்திருக்கும். அவரால் அவரது முழு கவனத்தையும் செலுத்தி தேர்வு எழுதியிருக்க முடியாது. நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகளின் நோக்கம் மாணவ, மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத் தான். தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கவனமாக இருந்தாலே எத்தகைய முறைகேட்டையும் தடுக்க முடியும். அதை விடுத்து உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு நடத்தப்படும் வெடிகுண்டு சோதனையைப் போல மாணவ, மாணவியரை கொடுமைப்படுத்துவதை மன்னிக்க முடியாது.

நீட் தேர்வுக்கான சோதனையின் போது மாணவிகள் இழிவுபடுத்தப்படுவது இது முதல்முறையல்ல. 2017ம் ஆண்டிலிருந்து இவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2017ம் ஆண்டில் கேரளத்தின் கண்ணூரில் ஒரு மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்டது. இப்போது தமிழகத்திலும் அத்தகைய அவலம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ) தமிழக அரசு புகார் தெரிவிப்பதுடன், இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்துவதற்கும் ஆணையிட வேண்டும். மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.