சென்னை: தங்களது பிள்ளைகளின் மதிப்பெண் குறித்து சக மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100-வது ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் இருந்து தேர்வு எழுதிய 70 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியலில் ஒரு மாணவி 100 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 3 பேர் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அந்தப் பள்ளிக்கு நேரில் வருகை தந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மாணவர்களின் தனித்திறமைகள் சார்ந்து உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு அளித்த ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இந்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் மதிப்பெண் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். பெற்றோர்கள்தான் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். பிள்ளைகளை பாராட்ட வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோர்களுக்குதான் உள்ளது. இரண்டாவது பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சக மாணவர்களின் மதிப்பெண் குறித்து ஒப்பிட்டு பேசக் கூடாது” என்று அமைச்சர் கூறினார்.