புதுடெல்லி: கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘கர்நாடக இறையாண்மை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுத்து, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் மனு அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும், அக்கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அதில், “இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்கான அழைப்பும் பிரிவினைவாதத்துக்கு சமம். அத்துடன், இது தீங்கான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்று பாஜக தெரிவித்துள்ளது. மேலும், சோனியா காந்தி பேச்சுத் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவினையும் புகாருடன் இணைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், “அவர் (சோனியா காந்தி) வேண்டுமென்றே “இறையாண்மை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். நாட்டைத் துண்டாட நினைக்கும் கும்பல்களின் நோக்கங்களையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளடக்கியுள்ளது. அவர்கள் இப்போது அதற்கான வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். இந்த தேச விரோத செயலுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
மற்றொரு அமைச்சரான ஷோபா கரந்த்லாஜே, “சோனியா காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் இன்று நாங்கள் புகார் அளித்துள்ளோம். ஹுப்ளியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கர்நாடகா இறையாண்மை என்று பேசியுள்ளார். ஒரு நாட்டுக்கு மட்டும்தான் இறையாண்மை என்பதை நாம் பயன்படுத்துவோம். நாட்டைத் துண்டாட நினைக்கும் கும்பல்களுக்கான தலைவராக சோனியா இருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
முன்னதாக, இன்னும் இரண்டு நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார பேரணிக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிபிபி தலைவர் சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடிகாக்களுக்கும் உறுதியான செய்தி ஒன்றினைத் தெரிவிக்கிறார்.காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை, ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த ஒருவரையும் அனுமதிக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து அரசியல் களத்தில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடாகவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கர்நாடகாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா வந்த காங்கிரஸ் கட்சியின் ஷாஹி பரிவார் அவர்கள் கர்நாடகாவின் இறையாண்மையைக் காப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாடு சுதந்திரம் அடையும்போது அது இறையாண்மை பெற்ற நாடு என்று அழைக்கப்படும். இதன்படி காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதற்கு அர்த்தம் கர்நாடகா இந்தியாவில் இருந்து பிரிந்து விட்டதாக அக்கட்சி நம்புகிறது” என்று தெரிவித்திருந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் புதன்கிழமை (மே 10) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
CPP Chairperson Smt. Sonia Gandhi ji sends a strong message to 6.5 crore Kannadigas:
“The Congress will not allow anyone to pose a threat to Karnataka’s reputation, sovereignty or integrity.” pic.twitter.com/W6HjKYWjLa
— Congress (@INCIndia) May 6, 2023