திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் இலுப்பையூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி. இவருடைய கணவர் திருமால், அந்தப் பகுதி தி.மு.க பிரமுகர். ஊராட்சிமன்றத் தலைவர் முத்துலட்சுமி தன் குடும்பத்துடன் இலுப்பையூர் ஊராட்சிக்குட்பட்ட காத்தான்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், காத்தான்பட்டி கிராமத்தின் நடுவே அவ்வூர் மக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் திருட்டுக்குழாய் வழியாக ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் திருமால் அவருடைய சொந்த தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது.
இதுவே தினசரி வாடிக்கையாக இருந்ததால் திருமாலிடம் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமு என்பவர் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமால், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாகச் சொல்லப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த திருமாலின் உறவினர்களும், ராமுவைக் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் ராமு அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமுமீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து திருமாலிடம் கேட்டோம். நம்மிடம் பேசிய அவர், “எங்கள் ஊரில் எல்லோரின் வீட்டுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தண்ணீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, 60,000 லிட்டர் கொள்ளளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தண்ணீர் விநியோகமில்லை என்ற குற்றச்சாட்டுக்கே இடம் கிடையாது.
தேர்தலில் என்னை எதிர்த்து நின்று தோற்றவர் ராமு. அந்த காழ்ப்புணர்ச்சியில் என்மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் அளிக்காதபோது, இவர் எதற்காக இப்படியொரு புகார் அளிக்கவேண்டும். அதேபோல் நான் தாக்கியதாகக் கூறுவது பொய். அதில் உண்மையில்லை” என்றார்.