மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இந்தாண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் தமிழம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும். அதன் காரணமாக மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பி படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தடையை மீறி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நாளை முதல் நாட்டுப்படகு மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.