நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் தமிழகத்திற்கு இரண்டு கிடைத்துள்ளன. சென்னை டூ மைசூரு மற்றும் சென்னை டூ கோவை ஆகிய ரயில்கள் ஆகும். இதில் சென்னையில் இருந்து மைசூரு சென்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரத்தை விட 10 நிமிடங்கள் முன்கூட்டியே ரயில் இலக்கை அடைந்துவிடும். புதிய நேரத்தின் படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்படும். இது காட்பாடி ரயில் நிலையத்தை 7.13க்கு சென்றடையும். பின்னர் 7.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
முன்னதாக 7.21 மணிக்கு வந்து சேர்ந்து 7.25க்கு புறப்படுவதாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இதேபோல் மறுமார்க்கத்தில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு மாலை 5.33 மணிக்கு வந்து சேர்ந்து 5.35க்கு புறப்படும். அதன்பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இரவு 7.20 மணிக்கு சென்றடையும்.
முன்னதாக 5.36க்கு வந்து 5.40க்கு புறப்படும் எனவும், 7.30 மணிக்கு சென்னை செல்லும் எனவும் கூறப்பட்டிருந்தது. நேரத்தை கணக்கிட்டு பார்த்தால் 10 நிமிடங்கள் முன்கூட்டியே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும். ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை படிப்படியாக மேம்படுத்தினால் பயண நேரம் மேலும் குறையும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
இந்த நேர மாற்றம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு அறிவிப்பில், ரயில் எண் 12840 கொண்ட சென்னை சென்ட்ரல் முதல் ஹௌரா வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் மெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இரவு 7.15 மணிக்கு புறப்படும். இனி 7.20க்கு ரயில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.