மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் 95,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். இந்த நிலையில் நேற்று சென்னை, மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்துக்கு தேர்வெழுத வந்த ஒரு மாணவியிடம் உள்ளாடையைக் கழற்றிவிட்டு தேர்வெழுதுமாறு தேர்வு கண்காணிப்பாளர் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும்கூட, மீண்டும் இது ஆங்காங்கே தொடர்வது மனித உரிமை மீறல் எனப் பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `நீமாணவியிடம் உள்ளாடையைக் கழற்றிவிட்டுத் தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்’ எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “சென்னை, மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் தேர்வெழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையைக் கழற்றுமாறு தேர்வு கண்காணிப்பாளர் கட்டாயப்படுத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வில், சோதனை என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பது கொடுமையின் உச்சமாகும்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசால் திணிக்கப்பட்ட கொடும் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுக் கானல் நீராகியது. தமிழ்நாட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பின்பும், நீட் தேர்வை ரத்துசெய்ய மோடி அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும். நீட் தேர்வு தோல்வி, தேர்வு பயம், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் அளிக்கும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், தற்போது சோதனை என்ற பெயரில் காதணி முதல் உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது மேலும் அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கவே கூடும்.
இதனால் உருவாகும் பதற்றமான சூழலால் தேர்வில் முழுக் கவனம் செலுத்தமுடியாத நெருக்கடியும் ஏற்படும். இது நீட் தேர்வுத் தோல்விகளும், தற்கொலைகளும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மாணாக்கர்களைப் பயங்கரவாதிகளைப் போல சோதனை செய்து, உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது சிறிதும் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். அதிலும் மற்ற மாநிலத்தில் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் மட்டும் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்குப் பின்னால் தமிழ்ப் பிள்ளைகள் மருத்துவராவதைத் தடுக்க, திட்டமிட்டு வேலை செய்வதாகக் கருத வேண்டியிருக்கிறது.
நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்று வாக்குறுதியளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்த தி.மு.க, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் நீட் தேர்வை இன்றுவரை ரத்துசெய்யவில்லையே ஏன்… நீட் கொடுமைக்கு முதல் பலியான அன்புத்தங்கை அனிதாவின் பெயரில் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ஓர் அரங்கம் உருவாக்கியிருக்கும் தி.மு.க அரசு, மருத்துவக் கனவுகள் சிதையும் அனிதாக்கள் உருவாகாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது…
சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வினை ரத்துசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கடந்த ஆட்சிக்காலத்தில் கருத்துக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டாண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு ரத்துசெய்யப்படாதது குறித்து என்ன கருத்துக் கூறப்போகிறார்… இதுதான் இரண்டு ஆண்டில் இந்தியத் துணைக்கண்டம் வியக்கும் திராவிட மாடல் அரசின் சாதனையா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, தி.மு.க அரசால் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்துக்குள் நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நீட் தேர்வின் பெயரால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவியின் உள்ளாடையைக் கழற்ற கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர்மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நீட் தேர்வுக்கு எதிரான வழக்கினை விரைவுபடுத்த உரிய சட்டப்போராட்டதை முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.