சென்னை : நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடிக்க உருவாகி வருகிறது லியோ படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படம் கொடுத்துள்ள அதிகப்படியான வெற்றியால் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் கடுமையான பனிப்பொழிவிற்கிடையில் காஷ்மீரில் 50 நாட்களை கடந்து நடந்தது. தற்போது படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
விஜய்யுடன் இணையும் நடிகர் அர்ஜுன் : நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை மேற்கொண்ட படக்குழுவினர், தொடர்ந்து 50 நாட்களை கடந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் படத்தின் சூட்டிங்கை எடுத்து முடித்தனர்.
தொடர்ந்து சென்னையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் பாடல் ஒன்று மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக இம்மாதம் 20 தேதி வாக்கில் பாடலின் ரிகர்சலும் தொடர்ந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாடலின் சூட்டிங்கும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பான திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கில் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மட்டும் படத்தின் சூட்டிங்களில் இணையமல் இருந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இவர் நடிகர் விஜய்யுடன் சென்னையில் நடைபெறும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இருவருக்கும் இடையில் பைட் காட்சி எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் லியோ படத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். இவருடன் படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட 6 வில்லன்கள் மோதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இயக்குநர் கௌதம் மேனனும் உள்ள நிலையில், அவர் விஜய்யுடன் தொடர்ந்து பயணிக்கும் வகையில் அவருக்கு கேரக்டர் அமைந்துள்ளதாக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
விக்ரம் படத்திலேயே தன்னை நடிக்க லோகேஷ் கனகராஜ் கேட்டதாகவும் ஆனால், கமலுடன் இணைந்து நடிக்க தனக்கு அச்சமாக இருந்ததால் தான் மறுத்து விட்டதாகவும் கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் கூறிய கேரக்டர் தன்னை மிகவும் இம்ப்ரஸ் செய்ததால் தான் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கௌதம் மேனன் -விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.