சென்னை: ஓபிஎஸ் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அவருடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தர்ம யுத்தம் சமயத்தில் என்னவெல்லாம் சொன்னார் என ஞாபகம் இருக்கிறதா.. அது குறித்துப் பார்க்கலாம்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தனர்.
அப்போது கடந்த காலங்களை மறந்து இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தனர். மேலும், அதிமுகவை காக்கவே இப்படி ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
ஒபிஎஸ்: இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. அதேநேரம் ஓபிஎஸ் திடீர் திடீரென இதுபோல அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்புவது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு பிப். மாதமும் இதேபோலத் தான் தர்மயுத்தத்தைத் தொடங்கினார். இப்போது இணைந்து பயணிக்க உள்ளதாக அறிவித்த சசிகலாவுக்கு எதிராகவே அவர் தர்மயுத்தத்தை நடத்தினார்.
அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், மெரினா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்த சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்த ஓபிஎஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறிய பல கருத்துகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அவர் சசிகலா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தர்ம யுத்தம்: தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாகத் தெரிவித்த அவர், கழகத்தின் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்ததாகவும் மக்கள் , தொண்டர்கள், விரும்பினால் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜயபாஸ்கர் என்னிடம் வந்து திவாகரன் உள்ளிட்டோர் சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்க விரும்புவதாக்கத் தெரிவித்தனர்.. வர்தா புயல், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றை நான் சிறப்பாகக் கையாண்டேன். அது அவர்களுக்கு எரிச்சலைத் தந்தது.
நான் முதல்வராக இருந்த போதே, சசிகலாவை முதல்வராக வேண்டும் என்று அமைச்சரவையில் இருக்கும் உதயகுமார் சொல்கிறார். இது தப்பு என்று சசிகலாவிடம் சொன்னால், அவர் கண்டித்துவிட்டதாகத் தெரிவித்தார்.. அப்போது உதயகுமார் பேச்சைத் தனிப்பட்ட முறையில் என்னிடம் கண்டித்த செல்லூர் ராஜூவும் அங்கே மதுரை சென்று சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்கிறார்
அவமானப்படுத்துகிறார்கள்: அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் வருத்தத்தில் உள்ளனர். சில சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, நானே கருத்து வேற்றுமையை ஏன் இப்படி வெளிப்படுத்துகிறார்கள் எனக் கேட்டேன். என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று கேட்டேன். தனியாக நின்று போராடவும் தயாராகவே இருக்கிறேன்.
இந்தச் சூழலில் திடீரென என்னிடம் கூடச் சொல்லாமல் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். இது குறித்து தகவல் தெரிந்தவுடன், போயஸ் கார்டன் சென்றேன். அங்கு மூத்த நிர்வாகிகள் எல்லாம் இருந்தனர். அவர்கள் சசிகலாவைத்தான் முதலமைச்சராக்க வேண்டும் என்றார்கள். இப்போது அதற்கு என்ன அவசியம் வந்தது எனக் கேட்டேன்.
அப்போது அவர்கள் சசிகலா தான் பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் பதவியையும் வகிக்க வேண்டும். நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகிவிடும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.. இப்படி இக்கட்டான சூழலுக்கு ராஜினாமா செய்யும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.