கோல்கட்டா, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மேற்கு வங்க மாநிலத்தில் திரையிட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார்.
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது.
கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக இப்படத்தில் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், இந்தப் படத்துக்கு எதிராக கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘கேரளாவில் பயங்கரவாதத்தின் புதிய வடிவத்தை அம்பலப்படுத்த எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை கேட்கும் காங்., பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக இருக்கிறது’ என்றார்.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு மேற்கு வங்க திரிணமுல் காங்., அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுபடுத்தியது. தற்போது தி கேரளா ஸ்டோரி திரிக்கப்பட்ட கதையாக வெளியாகி இருக்கிறது. தடையை மீறி வெளியிடும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த படத்திற்கு, மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், ”பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து பேசும் திரிணமுல் காங்., இந்தப் படத்துக்கு தடை விதித்ததன் வாயிலாக பயங்கரவாதத்தை ஆதரிப்பது நிரூபணமாகி உள்ளது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்