நெல்லிக்குப்பம்: திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் கடலூர் தேரடி வீதியில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றிவிட்டு தனது சொந்த மாவட்டமான விழுப்புரம் நோக்கி காரில் பயணித்துள்ளார்.
நெல்லிக்குப்பம் அருகே காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கையில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நடுவீரப்பட்டியைச் சேர்ந்த ஜோதி உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அமைச்சரின் பாதுகாப்பு வாகன போலீஸார் அழைத்துச் சென்று கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஜோதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.