சென்னை: Ponniyin selvan 2 Box Office (பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸ்) பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். லைகா நிறுவனமும், அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது.
பொன்னியின் செல்வன் 1: ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அருண்மொழி சோழன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை ஊமை ராணி காப்பாற்றுவது போலவும் முதல் பாகம் முடிவடைந்திருந்தது. படக்குழு எதிர்பார்த்த வெற்றியை முதல் பாகம் பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படமானது கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்தனர்.
கலவையான விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு கலவையன விமர்சனத்தையே கொடுத்தனர். அதுமட்டுமின்றி மணிரத்னம் தனது இஷ்டத்துக்கு வரலாறை மாற்றி வைத்திருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ம்னேலும் வரலாற்று படத்தை எப்படி எடுக்க வேண்டும் என ராஜமௌலியிடம் மணிரத்னம் க்ளாஸ் போக வேண்டும் எனவும் சிலர் ஓபனாகவே விமர்சித்தார்கள்.
வசூலில் டல்: ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை புரியும் என்று படக்குழு எதிர்பார்த்திருந்தது. ஆனால் படம் வெளியாகி பத்து நாள்கள் நிறைவடைந்த சூழலில் படத்தின் வசூல் முதல் பாகத்தைவிட ரொம்பவே சுமாராகத்தான் உள்ளது என தகவல்கள் வெளியாகி பொன்னியின் செல்வன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
லைகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: படம் இதுவரை 280 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியான சூழலில் லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்திருக்கிறது. அதன்படி, பொன்னியின் செல்வன் 2 படம் இதுவரை உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். 300 கோடியை தொடுவதற்கே பத்து நாள்கள் ஆகியிருப்பதால் 500 கோடியை தொடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என திரையுலகினர் கூறிவருகின்றனர்.