வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெளியிட வேண்டும் என கூறி நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செங்கல் ஏந்தி போராடுவோம்….! MP சு.வெங்கடேசன் பேட்டி
நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ஐ திருத்துவதற்கான Forest(Conservation)Amendment Bill 2023 எனும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. காட்டையும் காட்டு வளங்களையும் வணிக நலன் கருதி தனியாருக்குத் திறந்துவிடும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இம்மசோதாவின் மீது மே 18ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழுத்த் தலைவர் ராஜேந்திர ஆக்ரவால் எம்.பி. அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவும் தற்போது வரை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
நாடு முழுவதையும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மசோதவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் தாய்மொழியில் தெரிவிக்க அனுமதிப்பதே சனநாயக நடைமுறையாகும். அதற்கு மாறாக ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களின் உரிமையைப் பறிக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இம்மசோதாவிற்கு அறிமுகம் செய்வதற்கு முன்பாக இதே திருத்தங்கள் தொடர்பாக 2021ஆம் ஆண்டு வெளியான கலந்தாய்வு ஆவணம் தொடக்கத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் 12 மொழிகளில் வெளியிடப்பட்டது. அதிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, பின்னர் தாமதமாக வெளியானது. அப்போதும் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு நான் கடிதம் எழுதிய பின்னரே பிற மொழிகளில் வெளியிடப்பட்டது.
பல மாநில உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியானதும் குறிப்படத்தக்கது. ஆகவே, இந்த வனப் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதாவை தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிட வேண்டும். அதன் மீதான கருத்துகளையும் அனைத்து மொழிகளிலும் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவருக்கும், ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவிற்கும் கடிதம் வாயிலாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.