சென்னை: கருமேகங்கள் கலைகின்றன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா குறித்து வைரமுத்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட் ஆவார். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை முதல்முதலாக எழுதினார் வைரமுத்து. முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என புதுமையாக எழுதி இளையராஜாவின் மனதிலும், ரசிகர்களின் மனதிலும் தனது தடத்தை பதித்துவிட்டார்.
இளையராஜாவுடன் கூட்டணி: அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகிவிட்டார் வைரமுத்து. அதிலும் பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தின. அவர்கள் இணைந்த முதல் மரியாதை, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை.
உடைந்து போன கூட்டணி: ஆனால் யார் கண் பட்டதோ இளையராஜா – வைரமுத்து கூட்டணி உடைந்துபோனது. அதற்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டுமென பலர் முயன்றனர். ஆனால் இன்றுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இதுகுறித்து சில வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்த வைரமுத்து, “நாங்கள் இருவரும் இணைந்து பழையபடி பாடல்களை கொடுத்தால் ரசிகர்களை புதுமையை எதிர்பார்ப்பார்கள்;
தற்போதைய புதுமைப்படி பாடல்களை கொடுத்தால் இவர்களுடைய பழைய ஸ்டைல் எங்கே போயிற்று என கேட்பார்கள். எனவே இந்த சிக்கல் வராமல் இருப்பதற்கு நாங்கள் இணைந்து பணியாற்றாமல் இருப்பதுதான் நல்லது”என கூறியிருந்தார்.
கூச்சப்படாமல் சொன்ன வைரமுத்து: இந்தச் சூழலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, இதை நான் சொல்வதற்கு கூச்சப்படவில்லை. பல வருடங்கள் பழைய பண்பாட்டை தேட வேண்டுமென்றால் இளையராஜாவை தோண்டினால் போதும் என பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
கருமேகங்கள் கலைகின்றன: இந்நிலையில் தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கருமேகங்கள் கலைகின்றன படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் லோகேஷ் கனகராஜ், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வைரமுத்து பேச்சு: விழாவில் பேசிய வைரமுத்துவிடம் இளையராஜா குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலஈத்த அவர், ” இவருடைய இசைய தீர்ந்தும்போகவில்லை, பழையதாகவும் ஆகவில்லை. அவரது பணியை தமிழ் திரையுலகம் வாங்கி வைத்துக்கொள்ளாமல் ஏன் தூங்குகிறது. சொல்லப்போனால் கலைஞர்களுக்கு வயது ஏற ஏற முதிர்ச்சி கூடி கலையில் ஒரு தெளிவு வரும்.
நடிகர்களுக்கு வயதானால் அவர்களுடைய மார்க்கெட் சரியும். கலைஞர்களுக்கு வயதானால் அவர்களுடைய மார்க்கெட் பெருகும். பெருக வேண்டும். ஏன் பெருகவில்லை என தெரியவில்லை. மிகச் சிறந்த இயக்குநர்களும் இவரை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என பேசியிருந்தார்.
வைரமுத்து போக்கில் மாற்றம்?: வைரமுத்துவின் இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்ளில் ஒருதரப்பினர், ‘வைரமுத்துவை பற்றி எழுந்த ஒரு சர்ச்சை காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி உடைந்துவிட்டதாக பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் வைரமுத்துவுக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் முன்போல் அதிகம் கிடைப்பதில்லை. ஏ.ஆர்.ரஹ்மானும் தனியாக சென்றுவிட்டதால் தமிழ் இசையின் அடையாளமாக இருக்கும் இளையராஜாவுடன் மீண்டும் இணைய வைரமுத்து விரும்புகிறார். அதன் காரணமாகத்தான் சமீபகாலமாக இளையராஜா குறித்து வைரமுத்து ஓபனாகவே பேசி தூதுவிடுகிறாரா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
அதேசமயம் வைரமுத்து வாய்ப்புக்காக யாரையும் புகழ்பவர் இல்லை. பாரதிராஜாவிடம் முதல்முறையாக வாய்ப்பு கேட்டபோதே, முடிந்தால் என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றே கேட்டவர். சூழல் இப்படி இருக்க அவர் ஏன் இளையராஜாவுக்கு தூது விட வேண்டும். தனது மனதில் இருப்பதைத்தான் அவர் பேசியிருக்கிறார் என்று வைரமுத்து ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.