தொடங்கியது அமைச்சரவை மாற்றம்..? கயல்விழி செல்வராஜூக்கு புதிய பதவி..!

திமுக அரசு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ போவதாக அண்மை காலமாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, அமைச்சரவையில் முக்கிய மாற்றமாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் மாற்றம் அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் இருந்து துவங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல, அமைச்சரவைக்குள் மேலும் சில முக்கிய முகங்கள் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் விரைவில் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுளள்து. இதன்மூலம் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

அதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில்;

தமிழக முதலமைச்சர் தலைமையில் 08.07.2021 அன்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து வாரியம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ஓர் உபதலைவர், 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் புதிய 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு இவ்வாரியத்தை திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.61. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 03.05.2023 –இல் ஆணையிடப்பட்டது

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

இவ்வாரியத்தின் உறுப்பினர் செயலராக மேலாண்மை இயக்குநர் தாட்கோ தொடர்ந்து செயல்படுவார். மேலும், இவ்வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் பயணப்படி மற்றும் தினப்படி விதிகளுக்குட்பட்டு அளிக்கப்படுகிறது. துணைத் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பயணப்படி / தினப்படி பெற்று வழங்க மேலாண்மை இயக்குநர், தாட்கோவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய துணைத் தலைவராக கனிமொழி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்களையும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.