சென்னை: கோடை காலம் என்றால் வெயில் வாட்டுவது மட்டுமல்ல. புயலும் வரும். தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் நவம்பர், அக்டோபருக்கு அடுத்தபடியாக மே மாதத்தில் அதிக புயல்கள் உருவாகியுள்ளன என்று வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, படிப்படியாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் உருவானால், இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்துள்ள ‘மொக்கா’ என பெயரிடப்படும். மொக்கா என்பது அந்நாட்டில் உள்ள துறைமுக நகரத்தின் பெயர்.
வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இந்திய கடலோர பகுதியில் புயல்கள் உருவாகும் காலம் 2 வகையாக பிரிக்கப்படுகிறது. ஜூன் 1 முதல் டிச.31 வரை பருவமழை காலமாகவும், இதர மாதங்கள் பருவமழைக்கு முந்தைய காலமாகவும் கணக்கிடப்படுகிறது.
பருவமழைக்கு முந்தைய காலத்தை பொறுத்தவரை, மே மாதத்தில்தான் அதிக புயல்கள் உருவாகியுள்ளன. கடந்த 2020-ல் ‘ஆம்பன்’, 2021-ல் ‘யாஸ்’, 2022-ல் ‘அசானி’ ஆகிய புயல்கள் உருவான நிலையில், இந்த மே மாதத்தில் புயல் உருவாக உள்ளது. தொடர்ந்து 4-வது ஆண்டாக மே மாதத்தில் புயல் உருவாவது 1992-ம் ஆண்டுக்கு பிறகு இது முதல்முறை.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 1891-ம் ஆண்டு முதல் நாட்டின் வானிலை தரவுகளை பதிவு செய்து, பாதுகாத்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் கடந்த 132 ஆண்டுகளில் மொத்தம் 530 புயல்கள், தீவிர புயல்கள் உருவாகியுள்ளன. அதிகபட்சமாக நவம்பரில் 124, அக்டோபரில் 93, மே மாதத்தில் 65 புயல்கள் உருவாகியுள்ளன. கோடை காலம் என்றால் கடும் வெயில் வாட்டும் என்றுதான் கருதுகிறோம். ஆனால், புயலும் வரும். மே மாதத்தில் புயல் உருவாவது அரிதான நிகழ்வு அல்ல. வழக்கமானதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
தரவுகள் தட்டுப்பாடு: பருவமழை காலத்தில் புயல் உருவாவதற்கான சாதகமான சூழல் இருக்கும். வளிமண்டலத்தில் மேகக் கூட்டங்கள் உருவாகும். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். வீசும் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். அப்படி இருக்க, மழைக்கு சாதகம் இல்லாத, பருவமழைக்கு முந்தைய காலமான கோடை காலத்தில் கடலில் புயல்கள் எப்படி உருவாகின்றன? இதுபற்றி கேட்டபோது, கடல்சார் விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன் கூறியதாவது:
கடல் நீர் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பத்தால்தான் புயல்கள் உருவாகின்றன. கடல் நீர் வெப்பமாவதற்கு, காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கான சரியான தரவுகள் உலக நாடுகளிடம் இல்லை. இந்தியாவை சுற்றி பல நாடுகள் இருந்தாலும், இந்தியா மட்டுமே கடல் நீர் பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் உள்ள தரவுகளை பதிவு செய்கிறது.
பல நாடுகள் செயற்கைக் கோள் மாதிரிகளை நம்புகின்றன. அவற்றுடன் நிலப்பரப்பு, நீர்பரப்பு தரவுகளையும் இணைத்து ஆய்வு மேற்கொண்டால்தான் துல்லிய வானிலையை கணிக்க முடியும். வங்கக்கடலில் மே மாதத்தில் ஏன் புயல் உருவாகிறது என்பதை கணிக்க இப்போது உள்ள தரவுகள் போதாது. இவ்வாறு அவர் கூறினார்.