தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.
1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. அதனைத் தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்ன கவுண்டர்’, ‘அரண்மனை கிளி’ படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார். அவரது உடல் அசைவும், மொழி ஆளுமையும் தமிழ் சினிமாவில் கதாநாயகன்களுக்கு இணையான இடத்தை வடிவேலுக்குப் பெற்றுத் தந்தது.
காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு அதன் பின் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். இப்படி சினிமாவில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு போடப்பட்டது. இதன் காரணமாக அவர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். வடிவேலு நடிக்க ரெட் கார்டு போட்டாலும், அவரது காமெடி காட்சிகள் மீம்ஸ் மூலம் மக்களை தினசரி மகிழ்வித்து வந்தன.
இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அவர் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து குவியத் தொடங்கிவிட்டன. ரீ-எண்ட்ரியில் அவர் முதன்முதலில் நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது.
தற்போது, நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்திலும், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்துவருகிறார். மாமன்னன் படத்தில் இதுவரை பார்த்திராத வேடத்தில் வடிவேலு நடித்திருப்பதாகவும், இந்தப் படம் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதைக் காட்டும் எனவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
வடிவேலு ஒரு மிகச்சிறந்த பாடகரும் கூட, தொடர்ந்து திரைப்படங்களில் பாடியும் வருகிறார். முதல் பாட்டே இளையராஜா இசையில் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்ற ‘எட்டணா இருந்தா’ என்ற பாடலை பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, சிற்பி, வித்யாசாகர், சந்தோஷ் நாராயணன் வரை பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியிருந்தாலும் இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடல் பாடவில்லை.
இந்த நிலையில் முதன்முறையாக மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக பாடியிருக்கிறார். இந்தப் பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கிறார். பாடல் பதிவின்போது ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதியுடன் வடிவேலு இருக்கும் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.