மலப்புரம், கேரளாவில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் விதிகளை மீறி படகு இயக்கப்பட்டதே, நேற்று முன்தினம் நடந்த விபத்திற்கான காரணம் என தெரிய வந்துள்ளது. இதில் பலியானோரின் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ள நிலையில், தலைமறைவான படகு உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுார் — பரப்பனங்காடி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு, 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியரை ஏற்றிச் சென்ற இரண்டடுக்கு படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை, ஏழு குழந்தைகள் உட்பட 22 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, படகு உரிமையாளர் நாசர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில், தனுாரில் நாசரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு, கேரள அரசு சார்பில், 10 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில், 2 லட்சம் ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன?
கேரளாவில், படகு கவிழ்ந்த விபத்தில், விதிகளை மீறி அதிக பயணியரை ஏற்றிச் சென்றதே காரணம் என தெரிய வந்துள்ளது. அளவுக்கு அதிகமான எடையை தாங்க முடியாமல், படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மேலும், படகு உரிமையாளர் நாசர், மீன்பிடி படகை, பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல், சுற்றுலா சேவைக்காக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. படகில் பயணம் செய்த பயணியருக்கு எந்தவித பாதுகாப்பு உடைகளும் வழங்கப்படவில்லை.
நீதி விசாரணை
”படகு விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, மலப்புரத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:படகு விபத்து குறித்து, நீதி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. படகு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க, தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய நீதிக் குழு அமைக்கப்படும். மேலும், கேரள காவல் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவும் இது குறித்து விசாரிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்