அரசு போக்குவரத்துத்துறையின் புள்ளி விவரங்களின் படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் இயங்குகிறது. இதனால் மாநகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய வாகனங்களை நிறுத்துவதற்கும் போதுமான இடவசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
வீடு, அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இவ்வாறு சாலையோரங்களில் நிற்கும் வாகனகள் பிற வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் சாலையோரங்களில் பார்க்கிங்களை ஏற்படுத்துவதற்கு மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
மறுபுறம் இதன் மூலமாக மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர். “மாநகரில் வாகனங்கள் நிறுத்துவதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சாலையோர பார்க்கிங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், சி.பி. ராமசாமி சாலை, தி.நகரில் இருக்கும் டாக்டர் நாயர் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான நெரிசல் இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் அமைத்திருக்கும் 10 வணிக வளாகங்களின் விவரங்களை சேகரித்திருக்கிறோம். இங்கு காலியாக இருக்கும் இடங்களில் பார்க்கிங் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இது செயல்பாட்டுக்கு வந்தவுடன் அந்த பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வரும். அப்போது அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும். இந்த திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைத்து செய்கிறோம்.
இதேபோல் சென்னை மாநகராட்சியில் சாலைகளில் வாகனம் அதிகமாக நிறுத்தப்படும் தெருக்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகிறோம். அதில் சாத்தியம் உள்ள பகுதிகளில் பார்க்கிங் அமைக்கப்படும். ஒவ்வொரு நிறுத்தங்களிலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய சென்சார் கருவி பொருத்தப்படும்.
இது உள்ளே நுழையும் வாகனத்தின் பதிவு எண்ணை உடனடியாக சேகரித்து ரசீது வழங்கும் கட்டண மீட்டருக்கு அனுப்பி வைக்கும். பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனத்துக்கு காவல்துறையுடன் இணைந்து உரிய பாதுகாப்பு வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி மாநகராட்சிக்கு சொந்தமான பார்க்கிங்குகளில் இருந்து வசூல் செய்யப்படும் கட்டணம் தினமும் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை இருக்கிறது. புதிதாக பார்க்கிங்குகள் அமைக்கப்படுவதன் மூலம் இந்த வருவாய் மேலும் அதிகரிக்கும்” என்றார்.