12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் தோல்வியடைந்த 4 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சென்னை ஆவடி கோவர்த்தனகிரி பாரதிநகரை சேர்ந்த கனகராஜ் மகன் தேவா (வயது 17). இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இதில் நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார் இதனால் விரக்தி அடைந்த மாணவர் தேவா தனது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்த தனியார் பள்ளியில் படித்த மாணவி தாருண்யா (வயது 17). இரண்டு படங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது 19). கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால் இந்த ஆண்டு தனித்தேர்வராக எழுதினார். இதில் 29 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து மீண்டும் தோல்வி அடைந்தார். இதனால் மணமுடைந்த மாணவி ரமணி மன வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருந்ததி (வயது 18). பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என்று நம்பிய நிலையில் 380 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் குறைந்த மதிப்பெண் எடுத்து ஏமாற்றம் அடைந்த மாணவி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.