காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென பூமி குலுங்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தியா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இறந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி பெரிய பாதிப்பை சந்தித்தது. இதையடுத்து நிலநடுக்கம் குறித்து மக்கள் அதிக பயத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலநடுக்கம் அடிக்கடி உணரப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தான் இன்று அதிகாலையில் ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது.
இதுபற்றி தேசிய நிலஅதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛மே 9ம் தேதி அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கு 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமீபகாலமாக தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.