செவில்: ஸ்பெயின் நாட்டிலுள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர்பஸ் சி-295 ரக விமானங்களைத் தயாரிக்க இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 முதல் விமானத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 5-ம் தேதி ஸ்பெயின் செவில் நகரில் காலை 11.45 மணிக்கு பறக்கத் தொடங்கிய சி-295 ரக விமானம் 3 மணி நேரம் விண்ணில் பறந்து பிற்பகல் 2.45 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
ஸ்பெயினின் ஏர்பஸ் டிஃபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் (மிலிட்டரி ஏர் சிஸ்டம்ஸ்) ஜீன்-பிரைஸ் டுமான்ட் கூறும்போது, “இந்தியாவுக்காகத் தயாராகும் ஏர்பஸ் சி-295 விமானத்தின் முதல் விமானத்தின் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. உலகிலேயே சி-295 விமானத்தின் மிகப்பெரிய ஆபரேட்டராக இந்திய விமானப்படை உருவாகும் நிலையில், இந்த திட்டம் இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.
இந்திய விமானப் படையில் தற்போது உள்ள ஏவ்ரோ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக இந்த சி-295 ரகத்தில் 56 விமானங்களை வாங்க இந்தியா ஆர்டர் அளித்திருந்தது. இதில் 16 விமானங்கள் செவில் நகரில் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். எஞ்சியுள்ள 40 விமானங்கள் இந்தியாவிலுள்ள டாடா அட்வான்ஸுடு சிஸ்ட்ம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.