கராச்சி: பாகிஸ்தானின் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 199 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு வரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்கிறது.
இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் தங்கள் நாட்டு கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கைது செய்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிறைகளில் 654 இந்திய மீனவர்கள் வாடுகின்றனர்.
இந்திய சிறைகளில் 83 பாகிஸ் தானிய மீனவர்கள் உள்ளனர். இந்திய மீனவர்கள் 654 பேரில் 631 பேர் தண்டனை காலத்தை முடித்துவிட்டனர். இந்நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக 199 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்யவுள்ளது.
உடல்நலக்குறைவு
இதுகுறித்து சிந்து மாகாண சிறைத் துறை அதிகாரி காசி நசீர் கூறும்போது, “இந்திய மீனவர்கள் 199 பேரை வரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். இவர்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர். மீனவர்களுடன் திருப்பி அனுப்பப்பட விருந்த இந்திய சிவில் கைதியான சுல்பிகர், உடல்நலக்குறைவு காரணமாக கராச்சி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்” என்றார்.
இதுகுறித்து கராச்சியின் லந்தி சிறை அதிகாரிகள் கூறும்போது, “சுல்பிகர் கடுமையான காய்ச்சல் மற்றும் இதய பிரச்சினைகள் குறித்து புகார் செய்திருந்தார். அவரது உடல் நிலை கடந்த வாரம் மோசமடைந்தது. எனவே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நுரையீரல் தொற்று காரணமாக அவர் உயிரிழந்தார்” என்றனர்.
இதுகுறித்து இந்தியக் கைதிகளுக்கு உதவி வரும் எதி அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கராச்சியில் உள்ள லந்தி மற்றும் மாலிர் சிறைகளில் நோய்வாய்ப்படும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை. இதனால் நாள்பட்ட நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே சுல்பிகரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.