போபால்:
மத்திய பிரதேசத்தில் ஆற்றுப்பாலத்தை உடைத்துக் கொண்டு பேருந்து கீழே விழுந்ததில் அதில் பயணித்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டுநர் தூங்கியதே இந்த விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தப்பியோடிய பஸ் டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தறிகெட்டு ஓடிய பஸ்:
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நகருக்கு தனியார் பேருந்து ஒன்று, இன்று அதிகாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் உட்பட 41 பேர் பேருந்தில் இருந்தனர். இந்நிலையில், காலை 9.15 மணியளவில் கார்கோனின் ஊன் பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தை கடந்த போது, திடீரென பேருந்து தறிகெட்டு ஓடியது.
பாலத்தை உடைத்துக்கொண்டு..
இதில், ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து கீழே விழுந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தரையில் பேருந்து விழுந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கிச் சென்று, பயணிகளை மீட்டனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 6 பெண்களும், 3 குழந்தைகளும் அடங்குவர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
தூங்கிய ஓட்டுநர்:
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூங்கியதே இந்த விபத்துக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், பேருந்து ஓட்டுரை அங்கு காணவில்லை. அவர் தலையில் ரத்தம் வழிய வழிய அங்கிருந்து ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரத்தத்துடன் தப்பிய டிரைவர்:
அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பேருந்து கவிழ்ந்த ஆற்றில், தண்ணீர் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை, தண்ணீர் இருந்திருந்தால் பஸ்ஸில் உள்ள அனைவருமே நீரில் மூழ்கி உயிரிழந்திருக்ககூடும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.