தமிழக அமைச்சரவை மாற்றம்? – ஆளுநரை சந்திக்கிறார் மூத்த அமைச்சர் துரைமுருகன் 

சென்னை: தமிழக அமைச்சரவையின் மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2021 மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. இதையடுத்து, கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முதலில், போக்குவரத்து துறையை கவனித்து வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து அத்துறை எஸ்.எஸ்.சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பின்னர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, வரும் மே 7-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சூழலில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பெற்றுள்ள முதல்வர், சில மாற்றங்களை செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக செயல்படாத அமைச்சர்களை மாற்றிவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், சில அமைச்சர்களுக்கு துறைகளை மாற்றி வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்பிறகு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா அல்லது மானா மதுரை எம்எல்ஏ தமிழரசி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழரசி ஏற்கெனவே இத்துறையின் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.

இதுதவிர, பால்வளத் துறை அமைச்சர் நாசரும் இந்த பட்டியலில் உள்ளார். பால் கொள்முதல், பால் விநியோகம் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், நாசர் அதை சரியாக கையாளவில்லை என்ற வருத்தம் முதல்வருக்கு உள்ளதால், அவரை மாற்றிவிட்டு மூத்த அமைச்சர் ஒருவருக்கு இத்துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர, டெல்டா மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கூடுதலாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.