'திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சி' – நாடாளுமன்ற தேர்தலுக்கு கைக்கொடுக்குமா?!

திமுக கடந்த 7-ம் தேதியுடன் தனது 2 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது. இதையடுத்து அக்கட்சியினர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருவதாக சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். “தமிழகத்தில் சாதி சண்டை இல்லை, துப்பாக்கி சண்டை இல்லை, சாதி – சமய பூசல் ஏதுமின்றி மாநிலம் அமைதியாக இருக்கிறது.

DMK – திமுக – ஸ்டாலின்

இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவோடு முடிவு செய்து விட்டார்கள். அந்த வகையில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது” என தெரிவித்திருந்தார். ஆனால் மறுபுறம் திமுகவின் இரண்டு ஆண்டுகால ஆட்சியை எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாதது, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேங்கைவயல் விவகாரம், 12 மணி நேர வேலைக்கு சட்டம் கொண்டு வந்தது, பழைய ஓய்வூதிய திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்துகிறார்கள். இதற்கிடையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே, இந்த 2 ஆண்டுகால ஆட்சி திமுகவுக்கு கை கொடுக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன். “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய திமுக கூட்டணி அப்படியே இருக்கும். 2019-ல் இருந்து வெற்றியை பார்த்து வருகிறார்கள். எனவே எந்த மாற்றமும் இருக்காது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை வரும்.

பின்னர் சரியாகிவிடும். ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடியுடன் இணைத்து விடுவார்கள். திமுக தேர்தலின் போது பெண்களுக்கான உரிமை தொகை, இலவச பயண திட்டம் போன்றவற்றை சாதனையாக கூறி வாக்கு கேட்பார்கள். இருந்தாலும் அரசுக்கு எதிரான மனோபாவம் இருக்கிறது. அது தேர்தலில் கடந்த ஆண்டை விட 5% குறைய வாய்ப்பு இருக்கிறது. மோடிக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் இருக்கிறது. அந்த வாக்கு திமுகவுக்கு செல்லும்.

பிரியன்

இதற்கிடையில் தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் திமுக ஃபைல் என்ற ஒன்றை அண்ணாமலை வெளியிட்டார். வரும் காலங்களில் திமுகவின் ஊழல்களை அவர்கள் வெளியில் கொண்டுவருவார்கள். அதன் மூலம் திமுகவின் பெயரை கெடுக்க முடியுமா என்று திட்டம் வகுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி தான் திமுக வெற்றி பெற வேண்டும்.

எனவே கடந்த முறையை போல் 38 இடங்களில் வெற்றி பெற முடியாது. ஆனால் 35 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களிடம் எடுபட்டது போல் தெரியவில்லை. ஸ்டாலின் இமேஜ் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதை சிதைக்க தான் தற்போது வருமான வரித்துறை சோதனை போன்றவை நடக்கிறது.

துரை கருணா

ஆனால் சிறுபான்மையினர், பட்டியலினத்தவரின் வாக்கு திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. மோடிக்கு எதிரான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் அதுவும் ஒரு பலமாக அமையும். ஒருவேளை ஊழல் குற்றச்சாட்டுக்களில் திமுகவினரை மத்திய அரசு கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அது மேலும் திமுகவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேங்கைவயல் விவகாரம், 12 மணி நேர வேலைக்கு சட்டம் கொண்டு வந்தது, பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. இது தற்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலின் போது அது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்றார்.

அண்ணாமலை

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, “தற்போதைய கூட்டணி வரும் தேர்தலில் அப்படியே நீடித்தால் ஆரோக்கியமான வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த கூட்டணியில் 12 கட்சிகள் இருக்கிறது. அவர்களது வாக்கு அப்படியே கிடைக்கும்.

இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 12 மணி நேர வேலை மற்றும் அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தியது. இது படித்தவர்கள், செய்தித்தாள் படிக்கிறவர்கள் மத்தியில் தான் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடிமட்ட வாக்காளர்கள் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். மறுபுறம் அதிமுக 4 அணியாக பிரிந்து கிடைக்கிறது. அவர்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார்கள்.

இதுவும் திமுகவுக்கு பலமாக அமையும். தற்போது நடக்கும் வருமான வரித்துறை ஆய்வுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது திமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். இதுதவிர திமுக அமைச்சர்களின் பொதுவெளி பேச்சு, உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் அதிகாரிகளின் செய்லபாடுகள், கட்சியினரின் அத்துமீறல்கள் பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமான வரித்துறை

இது நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் சட்டசபையில் தாக்கத்தை ஏற்படுத்தும். யார் பிரதமர் வேட்பாளர் என்பதிலும் சிக்கல் நிலவுகிறது. மேலே எப்படி கூட்டணி அமைகிறதோ, அது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றியிலும் பிரதிபலிக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.