கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னருக்கும், ஒரு பழங்குடி கூட்டத்துக்கும் நடக்கும் யுத்தத்தை மையமாக வைத்து சென்ற மாதம் வெளியானது `யாத்திசை’ திரைப்படம்.
அறிமுக இயக்குநர், அறிமுக இசையமைப்பாளர் எனப் புது அணியாக பெரும் முயற்சியை மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக மன்னர் காலத்துக் கதை, வரலாற்றுத் திரைப்படம் என்றாலே பிரமாண்ட செட், உடை, சிகை அலங்காரம் எனப் பெரும் பட்ஜெட் செலவாகும் என்ற நிலையில், குறைந்த செலவில் பெரும் பிரமாண்டத்தை நிகழ்த்தியுள்ளது யாத்திசை படக்குழு. சிறு VFX காட்சி என்றாலே தயங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் 70% மேல் VFX-ன் தேவை இருக்கும் இப்படத்தை குறைவான பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த சவாலான முயற்சி எப்படிச் சாத்தியமானது என்பதைப் படத்தின் காட்சிப் படிம (VFX) இயக்குநர் ரவிக்குமார் ஆனந்தராஜ் உடன் பேசினேன்.
யாத்திசை VFX பணி எவ்வாறு தொடங்கியது, முன்தயாரிப்பு நடவடிக்கைகளாக என்னென்ன செய்தீர்கள்?
“இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ்தான் இம்முயற்சிக்கு முழுமுதற்காரணம். சினிமாவைப் பற்றிய தெளிவான புரிதலை உடையவர். இப்படத்தைத் தயாரிக்கப்போகிறேன் என்ற முடிவை எடுத்தவுடன், இத்துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவம் உடையவன் என்பதால் என்னைத் தேர்ந்தெடுத்து, எப்படிச் செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிடச் சொன்னார். அங்கிருந்துதான் இப்பயணம் தொடங்கியது. எந்த ஒரு படத்திற்கும் கிரியேட்டிவ் ஏரியாவான ஸ்கிரிப்ட் லாக் செய்த பிறகு எந்த மாற்றமும் இல்லாமல், Pre Production-ல் வேலை செய்தாலே VFX செலவைக் குறைத்துவிடலாம். இந்தப் படத்திற்கு 40-50 நாள்கள் ஒதுக்கி Pre Production வேலையைத் தெளிவாக முடித்து வைத்துவிட்டோம். எந்த எந்தக் காட்சிகளுக்கு CG தேவைப்படுமோ அதற்கு storyboard, heavy storyboard, படம் என்ன கலர் டோனில் வரப்போகிறது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல் அடிப்படையான அனிமேஷனை வைத்துப் படத்தை முழுமையாகச் செய்து வைத்துக்கொண்டோம். பிறகு ஆக்ஷன் காட்சிகள், சாதாரணக் காட்சிகள் என இரண்டாகப் பிரித்து ஷூட்டிங் செல்வதற்கு முன்னரே படம் எப்படி வரும் என்பதைப் பார்க்கும் ‘previz’ கையில் வைத்திருந்தோம். அது பெரிதும் உதவியது.”
பிரமாண்டங்களின் தேவை இருக்கும்போது பட்ஜெட்டை எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தீர்கள்?
“பெரிய படங்களில் எப்போதுமே அனைத்து லென்ஸ்களும் ஷூட்டிங் செட்டிற்கு வந்திருக்கும். பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதற்கான காசு கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. முறைப்படி முன்னரே ’ஷாட் டிவிசன்’ செய்துவிட்டோம். இன்றைக்கு என்ன லென்ஸ் தேவையோ அதை மட்டும்தான் வாடகைக்கு எடுப்போம். குறிப்பாக தேனி, கம்பம் போன்ற மலைப் பகுதிகளில் ஷூட் நடைபெறும்போது காட்டிற்குள்ளே செல்ல படக்குழுவினர் சிலருக்கே அனுமதி வழங்கப்பட்டது. மிச்சம் இருக்கும் நபர்கள் வெளியே காத்துக்கொண்டு இருப்பார்கள். நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் walkie talkie மூலம்தான் தகவல் பரிமாறிக்கொள்ளப்படும். நாங்கள் Daily Sheet-ல் இந்த சீனுக்கு இந்த கேமரா இத்தனை மணி நேரத்தில் முடிக்கிறோம் என்று முடிவு செய்திருப்போம். அந்த ஷீட் படக்குழுவில் உள்ள அனைவரிடமும் இருக்கும். Walkie-ல் அவ்வாறு ஷூட்டிங் முடிந்தது என்று தகவல் வந்தவுடனே விலையுயர்ந்த லென்ஸ், கேமராக்கள் அனுப்பி வைக்கப்படும். இது பெரும்பாலான செலவைக் குறைத்தது.”
யாத்திசை ஷூட்டிங்கில் VFX-ன் பங்கு எவ்வாறு இருந்தது?
“சினிமா என்பது ஏமாற்றுவேலைதான். அதைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்தாலே போதும். இப்படத்தில் ஒன்பது இடத்தில் மனித உடலை வெட்டி பலியிடும் சடங்கைக் காட்டும் நவகண்டம் காட்சி வரும். அதில் நீங்கள் காணும் அனைத்துமே கிராபிக்ஸ்தான். இதுபோல நீங்கள் எதிர்பாக்காத பல காட்சிகள் கிராபிக்ஸ் என்பது தெரியாமலே செய்திருப்போம். நவகண்டம் காட்சி மொத்தம் 15 நிமிடங்கள் திரைப்படத்தில் வரும். கூர்ந்து கவனித்தால், அதில் மக்கள் கூட்டத்தைக் காட்ட வேண்டும், வெட்டு விழுந்து ரத்தம் வருவதையும் காட்ட வேண்டும். சவாலான விஷயம் என்னவென்றால் இதை ஒரே இரவில் எடுத்து முடிக்கவேண்டும். ஒன்பது வெட்டையும் காட்ட நேர்க்கோட்டில் ஷூட் செய்திருந்தால் 3 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கும். ஒரே ஒரு வெட்டுக்கு ஒப்பனை செய்யவே 3 மணி நேரம் ஆகிவிடும். மொத்தம் இரண்டே ஒப்பனைக் கலைஞர்கள் இருப்பதால் நேரம் இழுத்திருக்கும். ஆக இந்தக் காட்சியை reverse action-ல் ஷூட் செய்ய செயல்திட்டம் போட்டு ஒரே இரவில் எடுத்து முடித்தோம்.”
போர் மற்றும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கிய விதம் குறித்து…
“சண்டைக் காட்சிகளை முன்னரே வடிவமைத்து அதை 5D கேமராவில் shoot செய்து வைத்துக்கொண்டோம். இது படப்பிடிப்பில் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவு செய்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், 20 x 20 Green Mat வைத்துதான் முழுப் படப்பிடிப்பையும் செய்தோம். பெரிய பெரிய நிறுவனங்கள் Graphics செய்யும்போது கலர்-லைட் மட்டும் பார்த்துவிட்டு Perspective-வைத் தவறவிட்டுவிடுவார்கள். நாங்கள் அதில் கவனமாக இருந்தோம். கூட்டத்தில் கடைசி நபர் எங்கு இருக்கிறார் என்பது வரை மார்க் செய்திருந்தோம். Perspective சரியாக இருந்தால் கிராபிக்ஸ் பற்றி வருத்தப்படத் தேவையே இல்லை. அதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டோம். 70 சதவிகிதம் கிராபிக்ஸ் காட்சிகள் என்பதால் படம் முடியும்போது உதவி இயக்குநர்களே perspective line போடும் அளவுக்குப் பயிற்சி பெற்றுவிட்டனர்.”
பட்ஜெட் கட்டுப்பாட்டினால் எந்த வேலை சிரமமாக இருந்தது? அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
“பட்ஜெட் மற்றும் கொரோனா ஊரடங்கினால் குறைந்த நபர்களை வைத்தே படப்பிடிப்பு நடந்தது. ஆனால் போர் மற்றும் சண்டைக் காட்சிகளில் அதிக நபர்கள் இருப்பதுபோல காட்ட வேண்டும். CG-யின் மூலம் கூட்டத்தை அதிகமாக்கும்போது அதே நபர்களை மீண்டும் மீண்டும் காட்டிவிடக்கூடாது. இதற்கு தனியாக உதவி இயக்குநர்களை வைத்து ஒவ்வொருவரும் 5 தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேலையைக் கொடுத்தோம். அது நன்றாக வேலை செய்தது. திரும்பத் திரும்ப வருபவர்களை மாஸ்க் செய்து மறைக்கவும் உதவியது.”
உங்கள் VFX அணியைப் பற்றி…
“மொத்தம் 40 நபர்கள் வேலை செய்தோம். பெங்களூர், சென்னை, ஐரோப்பா என அவர் அவர் வீட்டில் இருந்தே இதற்காக வேலை செய்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவை என்பதை எழுதி அனுப்பிவிடுவதாலும், Perspective சரியாக இருந்ததாலும் வேலை சுலபமானது. அவர்கள் சிறப்பாக VFX செய்ய ஷூட்டிங்கில் அதைச் சரியாக எடுத்திருக்க வேண்டும். எக்ஸிகியூடிவ் புரொடியூசர் தேவா, கேமரா எக்யூப்மென்ட்களைக் கையாண்ட ராகேஷ், லொகேஷன் பார்க்க உதவிய ரஞ்சித் மற்றும் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களின் அர்ப்பணிப்பான கூட்டு முயற்சியே இதற்குக் காரணம்.”
குறைந்த பட்ஜெட்டில் VFX செய்பவர்களுக்கு என்ன சொல்ல விருப்பப்படுகிறீர்கள்?
“ஷூட்டிங் சென்ற பிறகு கதையில் மாற்றம் செய்யாதீர்கள். தொடக்கத்தில் என்ன ஆர்வம் இருக்கிறதோ, ஒவ்வொரு படிநிலையிலும் அதே ஆர்வத்துடன் பணிபுரியுங்கள். ஷூட் செய்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் முறையான திட்டமிடலுடன் இறங்கினால் VFX பட்ஜெட்டிலே செய்துவிடலாம். இது VFX-க்கு மட்டுமல்ல, படத்திற்கும் பொருந்தும்.”