புதுடெல்லி: நாட்டின் தேசியவாத செயல்கள் அனைத்திலும் தடைகளை உருவாக்கும் அவர் இந்தக் காலத்து ஜின்னா” என்று மம்தா பானர்ஜியை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் விமர்சித்துள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடைவிதித்துள்ளது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் முதலாவது மாநிலமாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்தத்தடை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் மம்தா பானர்ஜியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர்,”நாட்டின் அனைத்து தேசியவாத நடவடிக்கைகளிலும் மம்தா பானர்ஜி தடைகளை ஏற்படுத்துகிறார். இந்த நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பிரச்சினையும் மறுப்பும் கொண்டிருக்கும் அவர் இந்தக்காலத்து ஜின்னா” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி, அம்மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை, இந்துக்களுக்கு எதிரானவர், இந்தியாவிற்கு எதிரானவர், பெண்களுக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தினார். தொடர்ந்து, “அவர் வங்கத் திரைப்பட சுதிப்டோ செனின் திரைப்படத்தை தடை செய்துள்ளார். அவர் வங்காளிகளின் பெயரில் வாக்கு கேட்கிறார். இப்போது முஸ்லிம்கள் பற்றிய படத்தினை தடை செய்துள்ளார். இது முஸ்லிம் வாக்குகளுக்காக செய்யப்பட்டதே” என்று தெரிவித்துள்ளார்.
விபுல் ஷா தயாரிப்பில், இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இந்தி மொழியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்து பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக கூறும் இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச, உத்தரப் பிரதேச மாநில முதல்வர்கள் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, படத்தை 7-ம் தேதி முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடைவிதித்த கேரளா உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தொடரப்பட்ட அவசர வழக்கை திங்கள்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.