நாகையில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை மகாலிங்கம் இருந்து வருகிறார். இவர் போதை பொருள் கடத்தலில் இலங்கை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்த நிலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லியில் வாகன தணிக்கையின் பொழுது வாகனம் ஒன்றை மறித்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில்உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கைப்பற்றப்பட்டது. வாகன ஓட்டுநரிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர் மகாலிங்கத்திடம் போதை பொருளை ஒப்படைப்பதற்காக நாகப்பட்டினம் செல்வதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்பாணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் வீட்டில் நாகை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் போதை பொருட்கள் கைப்பற்றப்படவில்லை இருப்பினும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸை கைது செய்த போலீசார் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.