கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள தங்கார்கோன் கிராம ஆற்றுப் பாலத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, இன்று காலை 8.40 மணி அளவில் விபத்துக்குள்ளானது. 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்ததில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, 15 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் கார்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரும் உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் கார்கோன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதுதான் விபத்துக்குக் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.