இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் இன்று (09.05.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தரப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டது.
எட்டப்பட்ட தீர்மானம்
கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் இன்றைய சந்திப்பில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அந்த முடிவை ஜனாதிபதி மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ. சுமந்திரன் தவராசா கலையரசன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முயற்சியினால் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
ஜனாதிபதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதாக கூறி வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தனியாக சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கவனத்திற்கு சாள்ஸ் நிர்மலநாதன் எடுத்துக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.