சென்னை வால்டாக்ஸ் சாலையில் தெருவோரம் வசிக்கும் ஏழைப் பெண் கூலித்தொழிலாளியின் மகளான மோனிஷா, பிளஸ்டூ தேர்வில் 499 மதிப்பெண் எடுத்துள்ளார். இருக்க இடமில்லை என்ற போதிலும் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடிக்க கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ள சாதனை மாணவியின் தன்னம்பிக்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
வசிக்க ஒரு வீடு இல்லை… வீதியில் தான் சாப்பாடு… வானமே கூரை… ஆனால் சாதிக்கத் துடிக்கும் இவருக்கு வானமே எல்லை… 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 499 பதிப்பெண் எடுத்த மாணவி மோனிஷா இவர் தான்..!
சென்னை மாநகரில் தங்களுக்கு என தனி முகவரி இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களின் முகவரியாக மாறி இருப்பவர் மாணவி மோனிஷா. தாய் குட்டியம்மா கூலி தொழிலாளி… அப்பா சிறு வயதிலேயே விபத்தில் இறந்து விட்டார். இருந்தும், விடா முயற்சியால் 2019 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கு பெற்றவர் மாணவி மோனிஷா
மணிலால் மேத்தா அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மோனிஷா பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 499 மதிப்பெண்களை எடுத்து சராசரியாக 83 சதவீதத்தை எட்டிப்பிடித்துள்ளார். அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள மாணவர்கள் சிலர் கூட சொற்ப மதிப்பெண்களையே பெற்றுள்ள நிலையில் இவர் எடுத்துள்ள இந்த மதிப்பெண்ணும் கிரிக்கெட் மீதான இவரது ஆர்வமும் வியப்பை ஏற்படுத்துகின்றது.
மழை பெய்தால் ஒதுங்கவும் , குளித்தால் உடை மாற்றிக் கொள்ளவும் 5 அடிக்கு 5அடி என்ற அளவில் சின்னஞ்சிறிய அறை போன்ற குடிசை…! இது இவர் ஒருவருக்கு அல்ல சென்னை செண்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் சாலையோரம் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு வசிக்கின்ற 30 குடும்பத்தினருக்கும் பொதுவான குடிசை என்று விவரித்த மாணவி மோனிஷா, 30 பேரின் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் டிவி பார்க்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு டிவியை வைத்திருக்கிறோம் என்றும் செல்போன் உள்ளிட்ட தங்களது மின்சாதான பொருட்களுக்கு சார்ஜ் போடுவதற்காகவும். வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் உடை மாற்றுவதற்கும் தூங்குவதற்கும் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ளுவோம் என்றார்
தனக்கு முறையாக பயிற்சி கிடைத்தால் கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்குவேன் என்று கூறும் மோனிஷா, காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்றும் அதிகாரத்தில் இருந்தால் தான் எங்களுக்கானவற்றை எங்களால் செய்து கொள்ள முடியும் என்றும் மன உறுதியுடன் சொல்கிறார்.
எங்களுக்கான வாழ்க்கையே தெருவோரங்களில் தான் இருக்கிறது.. அதற்காக இங்கேயே இருந்து விடாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற முயற்சியாக தான் படிப்பையும் விளையாட்டையும் கையில் எடுத்துள்ளேன்.. நிச்சயமாக நல்லவர்களின் உதவியுடன் லட்சியத்தை அடைவேன் என்றார்
எத்திராஜ் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள மோனிஷா, தனக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்..!