27வது ஆண்டுகளை நிறைவு செய்த 'இந்தியன்'

80, 90களில் கமர்ஷியல் மசாலா படம் என்றாலே ரஜினிகாந்த் படங்கள்தான் என்ற நிலை இருந்தது. அவரது படங்களுக்கென தனி வசூல் இருக்கும். அதே சமயம் அவருடன் போட்டி போட்ட கமல்ஹாசன் அதிகமான கமர்ஷியல் மசாலா படங்களைக் கொடுத்ததில்லை. ஒரு சில படங்களைத்தான் கொடுத்தார். ஆனால், அவை அனைத்திற்கும் மகுடமாக 1996ல் மே 9ல் வெளியான 'இந்தியன்' படம் வியக்க வைக்கும் ஒரு படமாக அமைந்தது. அப்படி ஒரு படத்தை அதற்கு முன்பு ரஜினி கூட கொடுத்ததில்லை என்ற விமர்சனங்களும் அப்போது வந்தது.

அப்படிப்பட்ட படம் வெளிவந்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஷங்கரின் இயக்கம், ஏஆர் ரகுமானின் இசை, கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை, சுஜாதாவின் வசனம், மனிஷா கொய்ரலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பு என இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒரு முன்னுதாரணப் படமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூல், சில வெளிநாடுகளிலும் பெரிய வசூல், தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக 50 கோடி வசூல், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்கம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என மூன்று தேசிய விருது என சில பல சாதனைகளைப் புரிந்தது.

சாட்டிலைட் டிவி உரிமையாக அப்போது அதிகபட்சமா 25 லட்சத்திற்கு விற்கப்பட்ட படம். படத்தின் நீளத்தை விடவும் அதிகமான விளம்பரங்களுடன் முதல் முறை ஒளிபரப்பில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்திய படம்.

96க்குப் பிறகு கமல், ஷங்கர் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாகி வரும் 'இந்தியன் 2' படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 'இந்தியன்' படம் தமிழ் சினிமாவில் புரிந்த சாதனைகளைப் போல 'இந்தியன் 2' படமும் புரியலாம் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.