தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருப்பதாகக் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின்போது, புதுமுகமாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும், சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படவிருப்பதாகவும், சில அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவிருப்பதாகவும் அரசியல் அரங்கில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்தது.
அதுவும் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்னதாகவே இந்த அமைச்சரவை மாற்றம் ஏற்படும் எனக் கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்த வண்ணமிருந்தன.
இதையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக திமுக-வின் மூத்த அமைச்சர் துரைமுருகன், இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் ரவியுடன் பேசவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதை மறுத்த துரைமுருகன், “யாமறியோம் பராபரமே… அமைச்சர்கள் சிலரை மாற்ற முதல்வருக்கு உரிமை இருக்கிறது. அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறினார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில், புதுமுகம் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கவும், தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநரின் முதன்மை செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, மே 11-ம் தேதி காலை 10:30 மணியளவில் ராஜ் பவனில் டி.ஆர்.பி.ராஜாவின் பதவியேற்பு விழா நடைபெறும்.
அதேபோல, பால்வளத்துறை அமைச்சர் நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததை ஏற்று, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா இன்… நாசர் அவுட் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றமும் இருக்கலாம் என்கிறார்கள்.