இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்ததாக இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கைது செய்யப்பட்டதைத் தடுத்த அவரது வழக்கறிஞர் படுகாயமடைந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான் அரசியல்வாதியாக உருவெடுத்தார். தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) என்ற கட்சியை தொடங்கிய இம்ரான்கான் 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வென்று பிரதமரானார்.
பாகிஸ்தானில் எப்போதும் அரசியல் நிலைத்தன்மை நீடித்து இருந்தது இல்லை. இதற்கு இம்ரான்கானும் விதிவிலக்கும் அல்ல. இம்ரான்கானுக்கு எதிராகவும் அவரது ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இம்ரான் கான் அரசு பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. ஒருவழியாக பதவியில் இருந்து இம்ரான்கான் வெளியேற்றப்பட்டார். இம்ரான்கான் அரசு கவிழ்ந்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்கு இம்ரான்கான் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவருக்கு எதிராக நீதிமன்றங்கள் பிடிவாரண்டுகளை பிறப்பித்தன. ஒருகட்டத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டும் கூட பிறப்பிக்கப்பட்டது. இதனால் இம்ரான்கானை கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் வீட்டு சுவர் ஏறி தப்பி குதித்து இம்ரான் கான் ஓடி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
#WATCH | “Pakistan Rangers abducted PTI Chairman Imran Khan,” tweets Pakistan Tehreek-e-Insaf (PTI)
(Video source: PTI’s Twitter handle) pic.twitter.com/ikAS2Pxlpw
— ANI (@ANI) May 9, 2023
இதனிடையே இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக இம்ரான்கான் இன்று வருகை தந்தார். அவரை இம்முறை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு அதிரடிப்படை குவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் இம்ரான்கான். அவரது கைது நடவடிக்கையை தடுக்க முயன்ற வழக்கறிஞர்கள் கடுமையாகவும் தாக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கான் கைது நடவடிக்கையால் பாகிஸ்தானில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 15 நிமிடத்துக்கு முன்னதாக இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இம்ரான் கைதுக்கு எதிராக அவரது கட்சியினர் அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இம்ரான் கான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிடப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானில் அசாதாரண நிலை உருவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.