தமிழக கேபினெட்டில் இணையும் டிஆர்பி ராஜா.. ஸ்டாலினின் செல்லப்பிள்ளை.. யார் இவர்?

சென்னை:
தமிழக அமைச்சரவையில் முதன்முறையாக இணையவுள்ளார் மன்னார்க்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா. முதல்வர் மு.க. ஸ்டாலினின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் டிஆர்பி ராஜாவை, பெரும் நம்பிக்கையுடன் அவர் கேபினட்டில் இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என கடந்த இரண்டு வாரங்களாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. குறிப்பாக, நிதியமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் ராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படும் என அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்த சூழலில், இன்று இரவு 9.30 மணியளவில் தமிழக அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது. பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நாசர் நீக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில், மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இருந்தபோதிலும், அவர் எந்தத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை. அவரது இலாகா விவரங்கள் பிறகு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் மே 11-ம் தேதி புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்க உள்ளார்.

திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலுவின் மகன் டிஆர்பி ராஜா. 1976-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் தளிக்கோட்டையில் இவர் பிறந்தார். உளவியல் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றவர். 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் மன்னார்குடி தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். திமுக ஐடி விங் மாநிலச் செயலாளராகவும் டிஆர்பி ராஜா பொறுப்பு வகித்து வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பொறுத்தவரை, சிறு குழந்தை முதலாகவே டிஆர்பி ராஜாவை பார்த்து வருகிறார். ஸ்டாலினின் செல்லப்பிள்ளை இவர் என்றே திமுகவினர் கூறுவார்கள். டிஆர்பி ராஜா மீது பெரிய நம்பிக்கையை வைத்து அவருக்கு அமைச்சரவையில் ஸ்டாலின் இடம் கொடுத்திருக்கிறார் என திமுக சீனியர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.